“418” கீர்த்தன் நாககவுடா இயக்கத்தில் பிரசாந்த் நீல், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை வெங்கி ஜி.ஜி.. இந்த படத்தில் சைத்ரா ஆச்சார், சூர்ய ராஜ் வீரபத்தினி, சரண் லக்கராஜு, ப்ரீத்தி பகடாலா, ரமேஷ் இந்திரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கர்நாடகாவின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில், 15 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த விடுதிக் கட்டிடம் மீண்டும் திறக்கப்படுகிறது. அந்த விடுதியில் 418 என்ற அறை மட்டும் திறக்கப்படாமல் மர்மமான முறையில் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்குள் யாரும் செல்லக்கூடாது என்றும், பெண்கள் அந்தக் கட்டிடத்திற்குள் நுழையக்கூடாது என்றும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
மருத்துவக் கல்லூரியில் புதிதாகச் சேரும் சரண் லக்கராஜு, சூர்யராஜ் வீரபத்தினி உள்ளிட்ட மாணவர்கள் விடுதியில் 417 ஆம் அறையில் தங்குகின்றனர். விடுதியில் தங்கிய சில நாட்களிலேயே சூர்ய ராஜ் வீரபத்தினிக்கு விசித்திரமான அனுபவங்கள் ஏற்படுகின்றன. இரவில் கேட்கும் மர்மமான சத்தங்கள், கண்முன்னே தோன்றும் உருவங்கள், யாரோ தன்னைத் தொடர்ந்து வருவது போன்ற உணர்வுகள் என அவனது வாழ்க்கை அச்சத்தில் மூழ்குகிறது.
சூர்ய ராஜ் வீரபத்தினியின் அனுபவங்கள் உண்மையா அல்லது மனதளவில் ஏற்படும் பாதிப்புகளா என்ற கேள்வி எழுகிறது. இதற்கான விடையைத் தேடி அவனும் நண்பன் சரண் லக்கராஜும் விசாரணையில் இறங்குகின்றனர். அப்போது அந்தக் கட்டிடத்தின் கடந்த காலத்தையும், 418-ஆம் அறை பூட்டப்பட்டதற்கான காரணத்தையும் அறிய முயற்சிக்கின்றனர்.
அந்த அறையின் பின்னணியில் இருக்கும் சைத்ரா ஆச்சார் கதை என்ன? அவளுக்கும் மருத்துவக் கல்லூரிக்கும் என்ன தொடர்பு? அறிவியலால் விளக்க முடியாத சம்பவங்கள் உண்மையிலேயே நிகழ்கின்றனவா? இக்கேள்விகளுக்கான பதில்களைத் திகிலும் மர்மமும் கலந்து சொல்ல முயற்சிக்கிறது “418”.
சைத்ரா ஆச்சார் தேவிகா கதாபாத்திரத்தில் படத்தின் முக்கிய பலமாகத் திகழ்கிறார். அவரது முகபாவனைகள், உடல்மொழி, மனவேதனையை வெளிப்படுத்தும் விதம் ஆகியவை கதாபாத்திரத்திற்கு உயிரூட்டுகின்றன. அமானுஷ்யத் தன்மை கொண்ட காட்சிகளிலும் உணர்வுப்பூர்வமான தருணங்களிலும் தனது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.
சூர்ய ராஜ் வீரபத்தினி விவேக் கதாபாத்திரத்தில், பயம் மற்றும் குழப்பத்தால் பாதிக்கப்படும் மாணவனாக நடித்துள்ளார். கதாபாத்திரத்தின் மனநிலை மாற்றங்களை இன்னும் ஆழமாக வெளிப்படுத்தியிருக்கலாம் என்ற எண்ணம் சில இடங்களில் ஏற்படுகிறது.
சரண் லக்கராஜு ரோஹித் கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். ப்ரீத்தி பகடாலா சைஷா கதாபாத்திரத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளார்.
ரமேஷ் இந்திரா உளவியல் ஆலோசகராக அனுபவமிக்க நடிப்பை வழங்குகிறார். மாணவர்களுடன் அவர் உரையாடும் காட்சிகள் படத்தின் உளவியல் அம்சத்தை வெளிப்படுத்த உதவுகின்றன.
ஒளிப்பதிவு தினேஷ் திவாகரன், இருண்ட அறைகள், பழைய கட்டிடம், குறைந்த வெளிச்சத்தில் அமைக்கப்பட்ட காட்சிகள் ஆகியவை மர்மமான சூழலை உருவாக்குகின்றன. குறிப்பாக, உளவியல் ஆலோசகர் மற்றும் மாணவர்களுக்கிடையேயான உரையாடல்களில் கேமரா கையாளப்பட்ட விதம் கவனம் பெறுகிறது.
இசை வெங்கி ஜி.ஜி., பின்னணி இசை படத்தின் முக்கியமான பலம். திடீர் சத்தங்கள், மர்மமான இசைக்கோர்வைகள், அச்சத்தை அதிகரிக்கும் ஒலிகள் ஆகியவை சில காட்சிகளில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இருப்பினும், உண்மையான திகில் உணர்வை உருவாக்குவதற்குப் பதிலாக, பல இடங்களில் திடீர் ஒலிகளையே படம் அதிகம் நம்பியிருக்கிறது.
படத்தொகுப்பு அகுல் அவினாஷ், படத்தின் நீளம் மற்றும் திரும்பத் திரும்ப வரும் காட்சிகள் படத்தொகுப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன. தேவையற்ற காட்சிகளைச் சுருக்கியிருந்தால் திரைக்கதையின் வேகம் அதிகரித்திருக்கும்.
அறிமுக இயக்குநரான கீர்த்தன் நாககவுடா, வழக்கமான பேய்ப் படமாக மட்டும் இல்லாமல், அமானுஷ்யம், அறிவியல், மனநலம் மற்றும் சமூகத்தின் அணுகுமுறை ஆகியவற்றை இணைத்து ஒரு திகில் திரில்லரை உருவாக்க முயற்சித்துள்ளார்.
பெண்களின் மனவேதனையைப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தையும், பதற்றம் மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சினைகளை அலட்சியப்படுத்தக் கூடாது என்பதையும் படம் மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறது.
ஆனால், இந்தக் கருத்துகளை வலுவான திரைக்கதையுடன் இணைப்பதில் இயக்குநர் முழுமையாக வெற்றி பெறவில்லை. கதாபாத்திரங்களின் பின்னணியை விரிவாகச் சொல்வதிலும், திகில் காட்சிகளை அமைப்பதிலும் காட்டிய கவனத்தைத் திரைக்கதையின் வேகத்திலும் இறுதிப்பகுதியிலும் காட்டியிருக்கலாம்.





