பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள “பேங் பேங்” திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. KRG கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகும் இப்படம், ரசிகர்களிடையே ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வித்தியாசமான ஜோம்பி ஜானரில் உருவாகும் இந்த திரைப்படம், ஆக்ஷன், காமெடி மற்றும் ஹாரர் அம்சங்கள் கலந்த முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வருகிறது. பிரபு தேவாவின் ஸ்டைலிஷ் திரைபட முகமும், வடிவேலுவின் தனித்துவமான நகைச்சுவையும் இணைவதால், ரசிகர்களுக்கு புதுமையான அனுபவம் காத்திருக்கிறது.
மலேசியாவில் 10 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பில் பிரமாண்டமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகவும், அவை படத்தின் முக்கிய ஹைலைட்டாக இருக்கும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
முன்னதாக வெளியான டைட்டில் டீஸர் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது. ஜோம்பிகளால் சூழப்பட்ட சூழலில் பிரபு தேவா மற்றும் வடிவேலு துப்பாக்கியுடன் மாஸாக தோன்றிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. “பிரபு வேலு”, “வடி தேவா” போன்ற ரசிகர்களின் நகைச்சுவை கலந்த பெயர்களும் இணையத்தில் டிரெண்டானது.
இப்படத்தை இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் எழுதி இயக்குகிறார். ஹாரர் அட்வென்ச்சர் பாணியில் உருவாகும் இப்படத்திற்கு Yuvan Shankar Raja இசையமைக்கிறார். H.C. வேணு ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பை கவனிக்கிறார். டான் பாலா கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார்.
மேலும், Animal திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற Sync Cinema நிறுவனம் சவுண்ட் டிசைனை மேற்கொண்டுள்ளது. தெலுங்கானா மாநில விருது பெற்ற அரவிந்த் மேனன் சவுண்ட் மிக்சிங் பணிகளை செய்துள்ளார்.
நடிகர் பப்லு பிரித்திவிராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள “பேங் பேங்”, KRG நிறுவனத்தின் நான்காவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வருகிறது. இந்தோனேசியாவின் Mount Bromo எரிமலை பகுதியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்த நிலையில், விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், “பேங் பேங்” திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.





